'அன்பு வெறுப்பை வென்றது': ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி அந்தஸ்து கிடைத்ததை கொண்டாடும் காங்கிரஸ்
மோடியின் குடும்பப்பெயர் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் நிவாரணம் அளித்ததை அடுத்து அவரது எம்பி பதவி இன்று அவருக்கு மீண்டும் கிடைத்தது. இந்த வெற்றியை கொண்டாடிய காங்கிரஸ் கட்சி, இது வெறுப்புக்கு எதிரான அன்பின் வெற்றி என்று கூறியது. மணிப்பூர் விவகாரத்தால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் மக்களவைக்கு திரும்பவுள்ளார். இதற்கு வரவேற்பு தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோடி அரசு எஞ்சியிருக்கும் ஆட்சி காலத்தில் உண்மையாக ஆட்சி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
சபாநாயகரின் முடிவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்பு
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் மல்லிகார்ஜுன கார்கே, "ராகுல் காந்தியை மீண்டும் எம்.பி.யாக நியமிக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. இது இந்திய மக்களுக்கு, குறிப்பாக வயநாடு மக்களுக்கு, நிம்மதியைத் தருகிறது. எஞ்சியிருக்கும் பதவிக்காலத்தில், எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து ஜனநாயகத்தை இழிவுபடுத்துவதை விட்டுவிட்டு, பாஜக மற்றும் மோடி அரசு உண்மையான நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்." என்று தெரிவித்துள்ளார். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த காங்கிரஸ் எம்பி சசி தரூர், " இது நீதிக்கும் நமது ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி!" என்று கூறியுள்ளார். அது தவிர, காங்கிரஸ் எம்பி ப.சிதம்பரமும் இந்த முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையில், மக்களவைக்கு திரும்பிய ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார்.