LOADING...
மு.க. ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்! வைகோவிடமும் வாழ்த்துப் பெறத் திட்டம்!
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்

மு.க. ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்! வைகோவிடமும் வாழ்த்துப் பெறத் திட்டம்!

எழுதியவர் Vasuki
May 11, 2026
12:47 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், இன்று பிற்பகல் 2:30 மணியளவில் திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசவுள்ளார். 17-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடரில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்று வரும் நிலையில், இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, பிற்பகல் 3:30 மணிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் அவரது இல்லத்தில் விஜய் சந்திக்க உள்ளார். தமிழக அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட வைகோவிடம் மாநில நலன் சார்ந்த ஆலோசனைகளை அவர் கேட்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசியல் நாகரிகம்

மரியாதை நிமித்தமான சந்திப்பு

சட்டமன்றத்தில் புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு நிகழ்வுகள் முடிந்தவுடன், முதலமைச்சர் விஜய் தனது பயணத் திட்டத்தைத் தொடங்கியுள்ளார். இன்று பிற்பகல் 2:30 மணிக்கு சென்னை தேனாம்பேட்டையில் (சித்தரஞ்சன் சாலை) உள்ள மு.க. ஸ்டாலின் அவர்களின் இல்லத்திற்கு முதலமைச்சர் விஜய் செல்கிறார். தேர்தலின் போது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த போதிலும், பதவியேற்ற பிறகு ஒரு மூத்த அரசியல் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுவது ஒரு சிறந்த அரசியல் நாகரிகமாகக் கருதப்படுகிறது. நேற்று விஜய் ஆற்றிய உரைக்கு ஸ்டாலின் அவர்கள் எக்ஸ் (X) தளத்தில் பதில் அளித்திருந்த நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. மு.க. ஸ்டாலினைத் தொடர்ந்து, மற்றுமொரு மூத்த அரசியல் தலைவரை விஜய் சந்திக்க உள்ளார்.

கி. வீரமணியைச் சந்தித்த விஜய்

புதிய அரசியல் கலாச்சாரம்

பின்னர் நாளை மறுநாள் அவர் விசிக தலைவர் தொல்.திருமாவளவனை சந்திக்கபோவதாகவும் கூறப்படுகிறது. பதவியேற்ற முதல் நாளே பெரியார் திடலுக்குச் சென்று கி. வீரமணியைச் சந்தித்த விஜய், இன்று ஸ்டாலின் மற்றும் வைகோவைச் சந்திக்கிறார். கசப்புகளை மறந்து அனைத்துத் தரப்புத் தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் விஜய் ஈடுபட்டுள்ளதாகத் தவெக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் யுகம் மலர்ந்துள்ள சூழலில், முதலமைச்சரின் இந்தப் பயணங்கள் ஆரோக்கியமான அரசியல் மாற்றத்திற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகின்றன.

Advertisement