அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் ஜனவரி 24இல் திறப்பு: முதல்வர் ஸ்டாலின்
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, ஜல்லிக்கட்டு எனும் ஏறு தழுவுதல் விழாவும் நடைபெறும். குறிப்பாக, மதுரை மாவட்டம் அவனியாபுரத்திலும், அதனைத்தொடர்ந்து, பாலமேடு, மற்றும் உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், இத்தனை காலமும், இந்த ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்கென தனியாக இடம் எதுவும் இல்லாமல் இருந்தது. வாடிவாசல் அருகேயுள்ள பிரதான காலரியில் முக்கிய பிரமுகர்கள் அமர்வதுக்கு மட்டும் தற்காலிக இடம் அமைக்கப்பட்டு வந்தது. பொதுமக்களும், பார்வையாளர்களும் அமர சரியான இடம் இருந்ததில்லை. இது ஒரு கோரிக்கையாக வைக்கப்பட்டது. அதற்காக, தமிழக அரசு சார்பில் அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டுத் திடல் அமைக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு மைதானம் ஜனவரி 24இல் திறப்பு
இந்த பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம், 66 ஏக்கர் பரப்பளவில், ரூ.44 கோடி மதிப்பில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்வையிடும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு 'கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தினை வரும் ஜனவரி 24 ஆம் தேதி திறக்கவுள்ளதாக தற்போது முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில், 'திராவிட மாடல் ஆட்சியில் பண்பாட்டின் அடையாளமாய் விளங்கும் ஏறுதழுவதலுக்கென மதுரையில் மிகப் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை" வரும் 24-ஆம் நாள் திறந்து வைத்து போட்டிகளைக் காண மதுரை, அலங்காநல்லூர் - கீழக்கரைக்கு வருகிறேன்' என பதிவிட்டுள்ளார்.