"தமிழ்நாட்டினுள் CAA கால்வைக்க விடமாட்டோம்": முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை
இன்னும் ஒரு வார காலத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் குடியுரிமை சட்டம் கொண்டு வரப்படும் என பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், 'தமிழகத்தில் CAA கால்வைக்க விடமாட்டோம்' என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது கருத்தை உறுதிபட தெரிவித்துள்ளார். "தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டிற்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில், The Hindu நாளேட்டில் வெளியான CAA பற்றிய செய்தியை மேற்கோள் காட்டி தனது கருத்தை தெரிவித்திருந்தார். "2021-இல் ஆட்சிக்கு வந்த உடனே CAA-வைத் திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றினோம்" எனவும் நினைவு கூறினார்.