இந்தியா முழுவதும் 7 நாட்களுக்குள் CAA நடைமுறைக்கு வரும்: மத்திய அமைச்சர் உத்தரவாதம்
குடியுரிமை (திருத்த) சட்டம் (சிஏஏ) அடுத்த வாரத்திற்குள் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸில் நேற்று (ஜனவரி 28) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் இதை தெரிவித்துள்ளார். அமைச்சர் தாக்கூர்,"அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டுள்ளது. அடுத்த ஏழு நாட்களுக்குள், CAA நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். இது எனது உத்தரவாதம்" என்றார். ஒவ்வொரு இந்திய மாநிலத்திலும், ஒரு வாரத்திற்குள் CAA அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற முந்தைய மக்களவைத் தேர்தல்கள் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில், சிஏஏ அமல் என்பது பாஜகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
குடியுரிமை (திருத்த) சட்டம் என்றால் என்ன?
CAA என்பது பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. டிசம்பர் 31, 2014க்கு முன் இந்தியாவிற்கு வந்த பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து துன்புறுத்தப்பட்ட முஸ்லிம் அல்லாத சிறுபான்மை அகதிகளான இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு, இது இந்திய குடியுரிமை வழங்குகிறது. இந்த திருத்த சட்டம், 2019 டிசம்பரில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் 2021-22 ஆண்டு அறிக்கைப்படி, ஏப்ரல் 1, 2021 மற்றும் டிசம்பர் 31, 2021க்கு இடையில், 1,414 முஸ்லீம் அல்லாத சிறுபான்மை வெளிநாட்டினருக்கு குடியுரிமைச் சட்டம், 1955 இன் கீழ், இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது. ஒன்பது மாநிலங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாவட்ட நீதிபதிகள் மற்றும் உள்துறைச் செயலாளர்கள் இந்தியக் குடியுரிமை வழங்க அதிகாரம் பெற்றுள்ளனர்.