Page Loader
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: மண்டலத் தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா
மதுரை மாநகராட்சியின் ஐந்து மண்டலத் தலைவர்களும் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளனர்

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: மண்டலத் தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா

எழுதியவர் Venkatalakshmi V
Jul 08, 2025
09:16 am

செய்தி முன்னோட்டம்

மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநகராட்சியின் ஐந்து மண்டலத் தலைவர்களும் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்யும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. தற்போதைய மண்டலத் தலைவர்கள்: மண்டலம் 1 - வாசுகி மண்டலம் 2 - சரவண புவனேஸ்வரி மண்டலம் 3 - பாண்டிச்செல்வி மண்டலம் 4 - முகேஷ் சர்மா மண்டலம் 5 - சுவிதா இவர்கள் அனைவரும் பதவியை விலகுவதற்கான உத்தரவை முதல்வர் நேரடியாக வழங்கியுள்ளார்.

பின்னணி

முறைகேடு தொடர்பான பின்னணி

2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் சுமார் 150 கட்டிடங்களுக்கு சொத்து வரி குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டதால் மாநகராட்சிக்கு ₹150 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தன. மதுரை மாநகராட்சி கமிஷனராக இருந்த தினேஷ்குமார் காலத்தில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு (CCB), சைபர் கிரைம் போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஓய்வுபெற்ற உதவி கமிஷனர் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், புரோக்கர்கள் மற்றும் உதவியாளர் தனசேகரன் ஆகியோரை போலீசார் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

ராஜினாமா

சர்ச்சையில் சிக்கிய மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் ராஜினாமா 

விசாரணையின் ஒரு பகுதியாக, மாநகராட்சி மண்டலத் தலைவர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் போலீசாரால் நீண்ட நேரம் விசாரிக்கப்பட்டனர். அவர்களின் கம்ப்யூட்டர் பதிவுகளும் விசாரணைக்கு உட்பட்டன. இந்நிலையில், சொத்து வரி முறைகேடு விவகாரம் மேலும் அரசியலாக்கப்படும் சூழலில், முதல்வர் ஸ்டாலின், "தயவோ, தாட்சண்யமோ இல்லாமல் பதவியை பறிக்க தயார்" எனக் கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று அவர் மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்களை பதவி விலக உத்தரவிட்டதாது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இந்த விவகாரத்தை கண்டித்து அதிமுக மதுரை மாநகராட்சிக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.