பக்தர்கள் விரும்பும் ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது; முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
பழனியில் நடைபெறும் இரண்டு நாட்கள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான தண்டாயுதபாணி கோவில் உள்ளது. இங்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) முதல் இரண்டு நாட்கள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த மாநாடு இரண்டு நாட்களில் முடிவடைந்தாலும், மாநாட்டிற்காக அமைக்கப்பட்ட அரங்கம் மற்றும் கண்காட்சி ஆகியவை ஒருவாரத்திற்கு பொதுமக்கள் பார்வைக்காக அப்படியே வைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் உரையின் முக்கிய அம்சங்கள்
முத்தமிழ் முருகன் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பக்தர்கள் விரும்பும் ஆட்சியாக திமுக ஆட்சி திகழ்வதாகக் கூறினார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கும் எனக் கூறிய முதல்வர், அதற்கு திராவிட மாடல் அரசு ஒருபோதும் தடையாக இருந்ததில்லை என எடுத்துரைத்தார். தற்போதைய திமுக ஆட்சியில் அறுபடை முருகன் கோவில்களில் ரூ.689 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டிய முதல்வர், இதுவரை 713 பேர் அறுபடை முருகன் கோவில் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதையும் தெரிவித்தார். திடீரென மாநாடு நடத்தவில்லை என்றும், கோவில்களுக்கு பல திருப்பணிகளை நடத்தி முடித்த பிறகே இந்த மாநாடு நடத்தப்படுவதாக கூறினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சிறப்பாக செயல்படுவதாகவும் பாராட்டினார்.