ஜம்மு காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 2 பேர் காயம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் 3 பேர் பயணித்த அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் துருவ் இன்று(மே 4) விபத்துக்குள்ளானது. இதனால், குறைந்தது இரண்டு பணியாளர்கள் காயமடைந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் ராணுவ ஹெலிகாப்டரில் ஏற்படும் மூன்றாவது விபத்து இதுவாகும். கிஷ்த்வார் மலை மாவட்டத்தின் மர்வா பகுதியில் இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாக மீட்புக் குழுக்கள் விரைந்ததாக கிஷ்த்வார் எஸ்எஸ்பி கலீல் போஸ்வால் தெரிவித்தார். இதற்கான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து
"ஹெலிகாப்டரில் இரண்டு மூன்று பேர் இருந்தனர். அவர்கள் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன." என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாத தொடக்கத்தில், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டலா மலைப் பகுதியில் இந்திய ராணுவ விமானச் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உயிரிழந்தனர். விபத்திற்குப் பிறகு, இந்திய இராணுவம், சஷாஸ்த்ர சீமா பால்(SSB) மற்றும் காவல்துறையினரால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளருடனான தொடர்பை இழந்த பிறகு விபத்துக்குள்ள்னது என்று அதிகாரிகள் கூறினர். இது போம்டிலாவின் மேற்கில் உள்ள மண்டலா அருகே விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது.