இன்று சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
சென்னையில் நேற்று அதிகன மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்ட நிலையில், வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வு பாதை காரணமாக தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், சென்னை, திருச்சி, கோவை மற்றும் நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. அதிகபட்சமாக பாரிமுனையில் 364 மி.மீ. மழை பதிவானது. மீனம்பாக்கத்தில் 280 மி.மீ., சென்ட்ரலில் 270 மி.மீ., திருவொற்றியூரில் 220 மி.மீ. மற்றும் எண்ணூரில் 210 மி.மீ. அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவசரகால குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்ட நிலையில், மாலையில் சிவப்பு எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.
வானிலை அறிக்கை
ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்கள்
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, சென்னை, திருச்சி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், தேனி, திருநெல்வேலி மற்றும் மதுரை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமையும் ஆரஞ்சு எச்சரிக்கை தொடர்கிறது.
தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்.
இதற்கிடையே சென்னையில் பெய்த திடீர் கனமழை குறித்துப் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் சந்திரமோகன், இது மேகவெடிப்பு கிடையாது என்றும், வழக்கமான பலத்த மழை மட்டுமே என்றும் தெளிவுபடுத்தினார்.