மெட்ரோ பணிகள் காரணமாக சென்னை போரூர் - வடபழனி இடையேயான போக்குவரத்து மாற்றம்
சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக போரூர் - வடபழனி இடையேயான போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் இரண்டு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. சென்ட்ரல் ரயில் நிலையம், ஆலந்தூர் வழியாக ஒரு வழித்தடமும், நந்தனம், சைதாப்பேட்டை வழியாக மற்றொரு வழித்தடமும் இயக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 54 கிலோமீட்டர் தூரத்திற்கு இயங்கும் இவற்றில், தற்போது மாதம் 80 லட்சம் பயணிகள் பயணம் செய்வதாக கூறப்படும் நிலையில், மெட்ரோ சேவையை விரிவாக்குவதற்கான பணிகள் சென்னையில் நடந்து வருகின்றன. இந்த இரண்டாம் கட்ட பணியில் குறிப்பாக புறநகர் பகுதிகளை சென்னையின் மையப்பகுதியுடன் இணைக்கும்படி கட்டமைக்கப்பட்டு வருகிறது.
காரம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள்
இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ திட்ட கட்டுமானத்தில் காரம்பாக்கத்தில் மெட்ரோவுக்கான தூண் அமைக்க ராட்சத கிரேன் பொருத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, போரூரில் இருந்து வளசரவாக்கம் வழியாக வடபழனி செல்லும் ஆற்காடு சாலை மூடப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து நாட்களுக்கு இந்த சாலை மூடப்பட்டிருக்கும். காரப்பாக்கம் போலீஸ் பூத் அருகே இடது புறமாக செல்லக்கூடிய வாகனங்களை ராஜேஸ்வரி சாலை வழியாகவும், ஆலப்பாக்கம் சாலை வழியாக செல்லும் வாகனங்களை ஆற்காடு சாலைக்கும் திருப்பி விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சமீபத்தில் சென்னை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் மேடவாக்கம் கூட் ரோடு முதல் வானுவம்பேட்டை வரையில் பணிகள் நடைபெற்றதால், போக்குவரத்து திருப்பி விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.