
சென்னையில் ஐடி ஊழியர் தற்கொலை: மேம்பாலத்தில் இருந்து குதித்து உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
சென்னையில் பட்டப்பகலில் ஒரு ஐடி நிறுவன ஊழியர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் நிகழ்ந்தது. அதிக வாகன நெரிசல் இருக்கும் காலை நேரத்தில் இந்த பகுதியில், ஒரு பைக் ஓட்டுநர் திடீரென வாகனத்தை ஓரமாக நிறுத்தி, மேம்பாலத்தில் இருந்து குதித்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். பாலாஜி தாக்கு என பெயர்கொண்ட அந்த நபர் சுமார் 35- 39 வயதுடையவர் என செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு திருமணமாகி, மனைவி மற்றும் மகன் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விவரங்கள்
சம்பவம் குறித்து மேலும் விவரங்கள்
சென்னை குரோம்பேட்டை, சாந்தி நகரில் வசித்து வந்த பாலாஜி, சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஐடி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை அவர் வழக்கம்போல் ஜிஎஸ்டி சாலை வழியாக பைக்கில் வேலைக்கு சென்றபோது, மேம்பாலத்தில் பைக்கை நிறுத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் 40 அடி உயரத்தில் இருந்து குதித்ததாக கூறப்படுகிறது. இதில், அவரின் தலை, முகம், இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். வாகன ஓட்டிகள் உடனே மீனம்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கவே, போலீசார் விரைந்து, ஆம்புலன்ஸ் மூலம் அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.