தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச தகுதியினை பெறவுள்ளது சென்னை எழும்பூர் ரயில் நிலையம்
தமிழ்நாடு மாநிலத்திலேயே முதன்முறையாக சர்வதேச தகுதியினை பெறவுள்ளது சென்னை எழும்பூர் ரயில் நிலையம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையிலுள்ள பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடங்களில் ஒன்றாக திகழ்ந்து வருவது எழும்பூர் ரயில் நிலையம். அத்தகைய சிறப்புடைய ரயில் நிலையத்தினை விமானத்தில் உள்ள வசதிகளுக்கு இணையாக மேம்படுத்த வேண்டும் என்று ரயில்வே முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக 2002ம் ஆண்டு ஹைதராபாத் நிறுவனம் ரூ.734.91 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் திட்ட மேலாண்மை பணிகளை மேற்கொள்ள மும்பையை சேர்ந்த நிறுவனம் ரூ.14.56 கோடி மதிப்பில் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது என்று தெரிகிறது.
ஒருங்கிணைந்த போக்குவரத்து நிலையமாக மாறவுள்ள எழும்பூர் ரயில் நிலையம்
தற்போது அதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில் இத்திட்டம் 13 துணை திட்டங்களாக வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் 4 துணை திட்டங்கள் தற்போது துவங்கி நடந்து வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. மற்ற 9 துணை திட்டங்களும் இம்மாத இறுதிக்குள் துவங்கவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மெட்ரோ ரயில் நிலையத்தினை எழும்பூர் ரயில் நிலையத்தோடு இணைக்கும் சுரங்கப்பாதைகள் அமைக்கும் பணிகளும் நடப்பதாக தெரிகிறது. இதனிடையே, இந்த ரயில் நிலையமானது மெட்ரோ, பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஒருங்கிணைக்கும் நிலையமாக அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறாக, சர்வதேச அளவில் உலகத்தரம் மிக்க ரயில் நிலையமாக மாற்றும் சீரமைப்பு பணிகள் மிக மும்முரமாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.