எதிர்கட்சியினரின் ஐபோன் ஹேக்: ஆய்வு செய்ய மத்திய அரசின் CERT-IN களமிறங்குகிறது
மத்திய ஆன்லைன் பாதுகாப்பு நிறுவனமான CERT-In (Indian Computer Emergency Response Team) ஐபோன் ஹேக்கிங் முயற்சிகள் குறித்த எதிர்க்கட்சிகளின் கூற்றை விசாரிக்கும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. CERT-In என்பது ஹேக்கிங் மற்றும் ஃபிஷிங் போன்ற இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிராக செயல்படும் அரசு நிறுவனமாகும். அரசாங்க இணையதளங்களை ஹேக்கிங்கிற்கு எதிராக பாதுகாக்கும் நிறுவனம் இது. காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன் கார்கே, சசி தரூர், பவன் கேரா, கே.சி.வேணுகோபால், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் ஐபோன்கள் ஹேக் செய்யப்படுவதாக இரு தினங்களுக்கு முன்னர் புகார் எழுப்பியிருந்தனர்.
மத்திய அரசு தங்களை வேவு பார்ப்பதாக குற்றச்சாட்டு
இவர்களை தவிர, சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி, ஆம் ஆத்மியின் ராகவ் சதா, ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி ஆகியோரும் 'ஹேக்கிங்' செய்யப்பட்டது தொடர்பான எச்சரிக்கையை பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து, மத்திய பாஜக அரசு தங்களை வேவு பார்க்கிறது என அவர்கள் குற்றம் சாட்டினர். மறுபுறம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வேவு பார்ப்பதால் தாங்கள் அச்சப்படப்போவதில்லை எனகூறியிருந்தார். இந்த நிலையில், மத்திய அரசு, இந்த விவகாரத்தில், ஆப்பிள் நிறுவன அதிகாரிகளை நாடாளுமன்ற குழு சம்மன் செய்ய இருப்பதாக நேற்று செய்திகள் வெளியாகின. தற்போது, இந்த விசாரணையில் மத்திய அரசின் CERT-IN களமிறங்குவதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரிகளும் உட்படுத்தப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.