LOADING...
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு கட்டுப்பாடு: மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல்
ஆன்லைன் சூதாட்டங்கள் இனி தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்படும்

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு கட்டுப்பாடு: மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 20, 2025
07:55 am

செய்தி முன்னோட்டம்

ஆன்லைன் சூதாட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு முன்மொழிந்துள்ள புதிய மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டங்கள் வழியாக நாடு முழுவதும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதனால் ஏராளமான தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழ்நிலையில், ஆன்லைன் சூதாட்ட செயலிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்புகள் வலியுறுத்தி வந்தன. இவ்வகையான செயலிகளின் விளம்பரங்களில் பிரபலங்கள் பங்கேற்பதும், அதன் தாக்கம் இளைஞர்கள் மீது பெரிதாக இருக்கின்றதென புகார்கள் எழுந்தன. இதனையடுத்து புலனாய்வு அமைப்புகளும் சில பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றன.

மசோதா

மத்திய அரசின் ஒப்புதல் பெற்ற மசோதா

இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஆன்லைன் கேமிங் செயலிகளில் உள்ள பந்தயம் மற்றும் சூதாட்டங்களைத் தடுக்க, அதனை விளம்பரப்படுத்துவதை தடை செய்ய புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக தயாரிக்கப்பட்ட மசோதா நேற்று மத்திய அமைச்சரவையில் ஒப்புதலுக்கு வந்தது. இந்த மசோதா, பெட்டிங் மற்றும் சூதாட்ட செயலிகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டப்படி மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அமைந்துள்ளது. மசோதா, இன்று அல்லது விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிறைவேறின், ஆன்லைன் சூதாட்டங்கள் இனி தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்படும். இளைஞர்களைப் பாதுகாக்கும் நோக்கில், பந்தயம் அல்லது சூதாட்டம் சார்ந்த ஆன்லைன் விளையாட்டு செயலிகள் மற்றும் அவற்றின் விளம்பரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.