Page Loader
வயநாடு நிலச்சரிவுக்கு 'கடுமையான இயற்கை' பேரிடர் அந்தஸ்து வழங்கியது மத்திய அரசு
வயநாடு நிலச்சரிவுக்கு 'கடுமையான இயற்கை' பேரிடர் அந்தஸ்து

வயநாடு நிலச்சரிவுக்கு 'கடுமையான இயற்கை' பேரிடர் அந்தஸ்து வழங்கியது மத்திய அரசு

எழுதியவர் Venkatalakshmi V
Dec 31, 2024
09:22 am

செய்தி முன்னோட்டம்

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் வயநாட்டில் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு மூன்று கிராமங்களை அழித்ததை, மத்திய அரசு "கடுமையான இயற்கையின்" பேரழிவாக அறிவித்தது. இந்த பேரிடரின் தீவிரம் மற்றும் தாக்கம் உள்ளிட்ட அனைத்து நடைமுறை நோக்கங்களுக்காகவும், இதனை கடுமையான இயற்கை பேரழிவாக IMCT ஆல் கருதப்படுகிறது என்று திங்களன்று வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. இது போன்ற கடுமையான பேரிடர்களுக்கான நிதியுதவி முதலில் மாநில பேரிடர் மீட்பு நிதியத்தால் வழங்கப்படுகிறது என்றும், அதன் பின்னர், மத்திய உள்துறை அமைச்சகம் நடத்தும் மதிப்பீடுகளின் அடிப்படையில் தேசிய பேரிடர் மீட்பு நிதியத்தால் கூடுதலாக நிதி வழங்கப்படும் என்றும் கேரள அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய செய்தியில் விளக்கமளித்துள்ளது.

கோர சம்பவம் 

நூற்றுக்கணக்கான உயிரை காவு வாங்கிய ஒரு இரவு

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கவில்லை என மாநில அரசின் விமர்சனங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அரசின் இந்த அறிக்கை வந்துள்ளது. ஜூலை 30 அன்று இரவு, வயநாட்டின் சூரல்மாலா மற்றும் முண்டக்காய் பகுதிகளில் பாரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த திடீர் நிலச்சரிவு கடும் மழையால் தூண்டப்பட்டது. இதன் விளைவாக 200க்கும் மேற்பட்ட இறப்புகள், ஏராளமான காயங்கள் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்கள் ஆனார்கள். கேரளாவின் வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.