விமானத் தகுதி சான்றிதழுக்கு லஞ்சம்: சென்னையில் CBI சோதனையில் பிடிபட்ட DGCA அதிகாரி
செய்தி முன்னோட்டம்
விமானங்களின் தகுதிச் சான்றிதழ்(Airworthiness Certificate) வழங்குவதற்காக ரூ. 2.5 லட்சம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில், சென்னையில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககத்தின்(DGCA) துணை இயக்குநர் மற்றும் தனியார் விமான பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் ஆகிய இருவரை சிபிஐ கைது செய்துள்ளது. சென்னையில் இயங்கி வரும் DGCA அமைப்பின் தகுதிச் சான்றளிப்புப் பிரிவின் துணை இயக்குநராக பணியாற்றி வரும் சுஷீல் குமார் கார்க் என்பவர், தனியார் விமானப் பயிற்சி நிறுவனமான 'எம்/எஸ் எக்வி ஏர் டிரெய்னிங் ஆர்கனைசேஷன்' இயக்கும் விமானங்களுக்கு தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்க லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைத்தொடர்ந்து சிபிஐ நடத்திய சோதனையில், ரூ. 2.5 லட்சம் லஞ்ச பணத்தைப் பெற்றபோது சுஷீல் குமார் கார்க் கையும் களவுமாகப் பிடிபட்டார்.
வழக்கு
சிபிஐ வழக்கு மற்றும் விசாரணை
லஞ்சப் பணத்தை கொடுத்த குற்றத்திற்காக எக்வி ஏர் டிரெய்னிங் நிறுவனத்தின் இயக்குநர் சச்சின் கேசவ் பானே என்பவரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
சுஷீல் குமார் கார்க், சச்சின் கேசவ் பானே மற்றும் எக்வி ஏர் டிரெய்னிங் நிறுவனம் மீது லஞ்சத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் டெல்லிக்கு அழைத்து சென்று மேல் விசாரணை நடத்த வதற்காக சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதத்திலும் ட்ரோன் இறக்குமதி செய்வதற்கான ஒழுங்குமுறை அனுமதிகளை வழங்க ரூ. 2.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக டிஜிசிஏ துணை இயக்குநர் ஜெனரல் மற்றும் கார்ப்பரேட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ஆகியோரை சிபிஐ கைது செய்தது குறிப்பிடத்தக்கது.