கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் புத்த மதப்படி நல்லடக்கம்
செய்தி முன்னோட்டம்
கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 5) இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல், நேற்று இரவு பொத்தேரியில் புத்தமதப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக அவரது உடலை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவி தொடுத்த மனுவை நீதிமன்றம் ஏற்று கொள்ளவில்லை.
அதனால் மாற்று இடமாக பொத்தூரை அவரது மனைவி பரிந்துரைக்க, அதற்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
இதனையடுத்து, பெரம்பூர் பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடல், நேற்று மாலை 4.45 மணியளவில் பொத்தூருக்கு இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
இறுதி ஊர்வலத்தில் அவரின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
புத்த மதப்படி சடங்கு
புத்த மதத்தினை தீவிரமாக பின்பற்றும் ஆர்ம்ஸ்ட்ராங்
நேற்று இரவு பெய்த மழையினால், அவரின் உடல் பொத்தூரை அடைய இரவு 10 மணி ஆனது.
அங்கு புழல் ஏரிக்கரை அருகே அமைந்துள்ள இடத்தில், அவரின் உடலுக்கு புத்தமத முறைப்படி இறுதிசடங்கு நடைபெற்றது.
இதற்காக கர்நாடகா மாநிலத்தில் இருந்து 7 புத்த பிட்சுகள் மற்றும் 5 வாசனை திரவங்கள் வரவழைக்கப்பட்டிருந்தது.
இதைக்கொண்டு அவரது உடலை தூய்மைப்படுத்தப்பட்டு, வெண்ணிற ஆடை உடுத்தி சந்தன பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஆர்ம்ஸ்ட்ராங், அம்பேத்கர் வழியில் தானும் புத்த மதத்தினை பின்பற்றுபவர்.
ஆண்டுதோறும், நாக்பூரில் உள்ள புத்த வழிபாட்டு தலத்துக்கு அவர் செல்வது வழக்கம் எனக்கூறப்படுகிறது.
அதேபோல, 3 ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பூரில் அவர் வசிக்கும் பகுதி அருகே, ஒரு புத்த கோயிலை ஆம்ஸ்ட்ராங் கட்டியுள்ளார்.