மத்திய அரசின் ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை மசோதாவிற்கு எதிர்ப்பு
மத்திய அரசால் முன்மொழியப்பட்ட ஒளிபரப்பு சேவைகள் (ஒழுங்குமுறை) மசோதாவின் முதல் வரைவு கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இதன் திருத்தப்பட்ட பதிப்பு தற்போது கசிந்துள்ள நிலையில், இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் யூடியூபர்கள் ஒழுங்குமுறை மேற்பார்வையின் கீழ் வருவது தொடர்பான கவலைகளை எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் முதலில் திரிணாமுல் காங்கிரஸின் ராஜ்யசபா எம்பி ஜவர் சிர்கார் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. அவர் மசோதாவின் திருத்தப்பட்ட வரைவு அறிக்கை வணிக நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினரிடம் தரப்பட்டுள்ளதாகக் கூறினார்.
குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
"மோடி அரசாங்கம் பாராளுமன்றத்தில் இருந்து உண்மையை அடக்குகிறது - ஆனால் வணிக நிறுவனங்கள் மற்றும் 'பங்குதாரர்களுடன்' தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது," என்று சர்கார் ட்வீட் செய்துள்ளார். "அரசாங்கம் ஒளிபரப்பு மசோதாவைத் திருத்தி ரகசியமாகப் பரப்பி விட்டது -- இருந்தும் அதைச் சொல்ல மறுக்கிறது. எஞ்சிய கேள்வியைத் தவிர்க்கிறது. எந்த ஜனநாயக நாட்டிலும் இது போன்ற கொடூரமான சட்டம் இல்லை," என்று அவர் மேலும் கூறினார். இந்நிலையில், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ராஜ்யசபாவில் இதுதொடர்பான கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மசோதா இன்னும் வரைவு கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த மசோதா சுதந்திரமாக செயல்படும் யூடியூபர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் என குற்றம் சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.