பிரிஜ் பூஷன் மல்யுத்த வீரர்களை மிரட்டினார்: டெல்லி போலீசார்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீரர்களை மிரட்டியதாகவும், போராட்டத்தை கைவிட்டு அமைதியாக போகும்படியும் கூறியதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக பெண் மல்யுத்த வீரர்களால் தொடரப்பட்ட பாலியல் துன்புறுத்தல் வழக்கின் விசாரணையின் போது, காவல்துறையினர் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் தெரிவித்தனர். முன்னாள் WFI தலைவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாமா என்பது குறித்த புதிய வாதத்தைத் தொடங்கிய டெல்லி காவல்துறையின் சமர்ப்பிப்புகள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. மல்யுத்த வீரர்களின் அறிக்கையை வாசித்த போலீஸ் வழக்கறிஞர், அதில் " நீங்கள் மல்யுத்தத்தை தொடர விரும்பினால் அமைதியாக இருங்கள்....உங்களின் தொழிலை நான் மனதுவைத்தால் அழித்துவிட முடியும்" என மிரட்டியதாக கூறப்பட்டுள்ளது.
சட்டப்படி குற்றம் என வாதிட்ட அரசு வழக்கறிஞர்
இந்த அறிக்கையை வாசித்த பின்னர், டெல்லி காவல்துறை வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவா, பிரிஜ் பூஷனின் கருத்துக்க்கள், அச்சுறுத்துவது, குற்றவியல் மிரட்டல் தொடர்பான இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 506 இன் கீழ் குற்றமாகும் என்று வாதிட்டார். மேலும் மற்றொரு புகார்தாரரின் அறிக்கையை மேற்கோள் காட்டி, ஸ்ரீவஸ்தவா, பிரிஜ் பூஷன் தன்னிடம், " ஒரு பெண் வீராங்கனையிடன், 'என்னுடைய தோதி-குர்தா உடையில் நான் எப்படி இருக்கிறேன்?' என கேட்டுள்ளார். இது ஒரு பெண்ணிடம் கேட்க வேண்டிய கேள்வியா?" என்று கேள்வி எழுப்பினார்.
கேள்விகளை அடுக்கிய காவல்துறை வழக்கறிஞர்
மல்யுத்த வீரரின் புகாரை மேற்கோள் காட்டி, WFI இன் முன்னாள் உதவிச் செயலாளரான வினோத் தோமரின் அலுவலகத்திற்குள் பெண்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவதாகவும், ஆண்களுக்கு அனுமதி இல்லை எனவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இது அவரின் நோக்கத்தை காட்டுகிறது எனவும் வழக்கறிஞர் வாதாடினார். பிரிஜ் பூஷன் ஒரு மல்யுத்த வீரரை கட்டிப்பிடித்த சம்பவத்தையும் டெல்லி காவல்துறை வழக்கறிஞர் குறிப்பிட்டார். கட்டியணைத்த பின்னர் அது ஒரு "தந்தையின் செயல்" என்று பிரிஜ் பூஷன் கூறியதாகவும், "குற்றவாளி மனம் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும். ஏன் தானாக முன்வந்து இந்த விளக்கத்தைக் கொடுத்தார்?" ஸ்ரீவஸ்தவா கேள்விகளை அடுக்கினார்.