கொல்கத்தாவில் குப்பை அள்ளிபோது திடீரென வெடித்த பொருள்; ஒருவருக்குக் காயம்
சனிக்கிழமை (செப்டம்பர் 14) பிற்பகல் 1.45 மணியளவில் மத்திய கொல்கத்தாவில் உள்ள ப்ளாச்மேன் தெரு மற்றும் எஸ்என் பானர்ஜி சாலை சந்திப்பில் ஏற்பட்ட வெடி விபத்தில் 58 வயதான குப்பை அள்ளும் தொழிலாளி ஒருவர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம், ப்ளாச்மேன் தெருவின் நுழைவாயிலில் ஒரு பிளாஸ்டிக் பையை குப்பை அள்ளும் நபர் எடுத்தபோது நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி உடனடியாக காவல்துறையால் சுற்றி வளைக்கப்பட்டது. மேலும், மாநில வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கப் பிரிவு (பிடிடிஸ்) விசாரணைக்கு வரவழைக்கப்பட்டது. பிடிடிஎஸ் ஊழியர்கள் பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்தனர். இதன்பின் அங்கு நிலைமை சகஜமாகி போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
வெடிவிபத்திற்கான காரணம்
வெடிவிபத்துக்கான காரணம் மற்றும் தன்மையை கண்டறிய தடயவியல் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், பாபி தாஸ் என அடையாளம் காணப்பட்ட குப்பை அள்ளும் தொழிலாளி, சிகிச்சைக்காக என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை காரணமாக, அவரது வாக்குமூலம் இன்னும் பதிவு செய்யப்படவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்குவங்க பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான சுகந்தா மஜும்தார், தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் ஜூனியர் மருத்துவர்களின் போராட்டத்தால் ஒருபுறம் மம்தா பானர்ஜி அரசுக்கு அழுத்தம் அதிகரித்துள்ள நிலையில், இந்த வெடிவிபத்து மேலும் சிக்கலை அதிகரித்துள்ளது.