ஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக; ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி ஆதிக்கம்
ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 8) நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3:00 மணி நிலவரப்படி, ஹரியானாவில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைத் தாண்டி பல தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி ஜம்மு காஷ்மீரில் முன்னணியில் உள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி 48 இடங்களிலும், பாஜக 29 இடங்களிலும், மக்கள் ஜனநாயகக் கட்சி 4 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. ஹரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 48 இடங்களிலும், காங்கிரஸ் 36 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
பொய்த்துப்போன தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு
முன்னதாக, ஹரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும், ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு-காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படும் என்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கணித்திருந்தன. இந்நிலையில், தற்போது நேரெதிராக நடந்து ஹரியானாவில் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துள்ளதோடு, தேசிய மாநாடு-காங்கிரஸ் கூட்டணி ஜம்மு காஷ்மீரில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது. பாஜகவுக்கு ஹரியானாவில் ஆட்சிக்கு எதிரான வலுவான எதிர்ப்பு அலை மற்றும் ஜாட்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அதிருப்தி இருந்தபோதிலும், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது. அதே சமயம், 2019 தேர்தலுக்கு பிறகு, தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி உதவியுடன் ஆட்சியமைக்க பாஜகவுக்கு, தற்போது தனிப்பெரும்பான்மை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.