"சாட்டையால் அடித்துக்கொள்ள போகிறேன்..செருப்பு அணிய மாட்டேன்": அண்ணாமலை அறிவித்த நூதன போராட்டம்
நாட்டையே உலுக்கியுள்ள சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஒருவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்திய நேரத்தில் அவர் தப்ப முயன்றதால், இடது கை மற்றும் கால் முறிந்தது என இன்று காலை தகவல் வெளியானது. அவர் மீது FIR-உம் பதியப்பட்டது. இந்த விவகாரத்தில் கைதானவர் திமுக கட்சியை சேர்ந்தவர் என பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை குற்றசாட்டை எழுப்ப, அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளன. இது குறித்து அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு நூதன போராட்டத்தை அவர் அறிவித்தார்.
FIR காப்பி இணையத்தில் வெளியிட்டதை கண்டித்த அண்ணாமலை
இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார் அண்ணாமலை. அதில், "அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில், முதல் தகவல் அறிக்கையின் நகல் மூலம் பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாள விவரங்களை, அவரது வீட்டு முகவரியுடன் போலீஸார் பகிர்ந்துள்ளனர். இது சகிக்க முடியாத விஷயம். காவல் துறையினரின் இந்த கொடூரமான செயல் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளது". "பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தும் இத்தகைய செயலில் ஈடுபட்ட நபர்கள் மீதும், மாநில காவல் துறையினர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஆளும் திமுக அரசை எதிர்த்து நூதன போராட்டம்
இந்த விவகாரத்தில் கைதான நபருக்கும் திமுகவிற்கும் சம்மந்தம் இருப்பதாக குற்றம் சாட்டிய அண்ணாமலை, "திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன். நாளையில் இருந்து 48 நாட்கள் விரதம் இருக்கப் போகிறேன். பிப்ரவரி மாதம் ஆறுபடை வீடுகளுக்குச் சென்று முருகனிடம் முறையிடப் போகிறேன். நாளை காலை 10 மணிக்கு என் வீட்டுக்கு வெளியே நின்று எனக்கு நானே சாட்டையடி கொடுக்கப் போகிறேன்" என பல நூதன போராட்டங்களை அறிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.