நாடாளுமன்ற அத்துமீறல்: குற்றவாளிகளுக்கு அனுமதி சீட்டு வழங்கிய பாஜக எம்பி மக்களவை சபாநாயகரை சந்தித்தார்
நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு விசிட்டர் பாஸ் வழங்கிய பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்தார். இந்த விவகாரம் குறித்து சபாநாயகரிடம் பேசிய எம்பி பிரதாப் சிம்ஹா, நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த மனோரஞ்சன் டி என்பவரின் தந்தை தனது தொகுதியான மைசூருவில் வசிப்பதாகவும், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைப் பார்வையிட அவர் அனுமதி சீட்டு கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான நேற்று(டிச 13) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்தது. அப்போது மக்களவை பூஜ்ஜியம் நேரத்தின் போது பார்வையாளர்கள் அரங்கில் இருந்து மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்த சாகர் சர்மா மற்றும் மனோரஞ்சன் டி ஆகிய இருவர், புகை குண்டுகளை வீசினர்.
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு
இந்நிலையில், நாடாளுமன்றத்திற்குள் சாகர் சர்மா நுழைவதற்கு தான் உதவி செய்ததாகவும், அதற்காக தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்ததாகவும் எம்பி பிரதாப் சிம்ஹா தெரிவித்துள்ளார். அது தவிர தனக்கு வேறு எந்த தகவலும் தெரியாது என்றும் எம்பி பிரதாப் சிம்ஹா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கூறியுள்ளார். இதற்கிடையில், நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் ஐந்தாவது சந்தேக நபரை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அத்துமீறலை 6 பேர் கொண்ட ஒரு குழு, நன்கு திட்டமிட்டு செயல்படுத்தி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐந்து பேர் ஏற்கனவே பிடிபட்ட நிலையில், ஆறாவது நபர் தலைமறைவாக உள்ளார்.