திமுகவிற்குள் சீனியர் தலைவர்களின் கிளர்ச்சியை அம்பலப்படுத்திய ரஜினியின் பேச்சு: அண்ணாமலை
நடிகர் ரஜினிகாந்த் கூறிய பழைய மாணவர்கள் கருத்து திமுக கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திங்களன்று (ஆகஸ்ட் 26) ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்தார். முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதி பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு மூத்த தலைவர்களை திறம்பட நிர்வகித்ததற்காக ரஜினிகாந்த் பாராட்டினார். ரஜினிகாந்த் தனது பேச்சில், "ஒரு பள்ளி ஆசிரியருக்கு (ஸ்டாலினுக்கு) புதிய மாணவர்களைக் கையாள்வது ஒரு பிரச்சனையே இல்லை. ஆனால் பழைய மாணவர்களை (மூத்த தலைவர்கள்) நிர்வகிப்பது எளிதான காரியம் அல்ல. இங்கு (திமுகவில்) பழைய மாணவர்கள் அதிகம்." என்று கூறியிருந்தார்.
ரஜினிகாந்த் பேச்சு குறித்து அண்ணாமலை கருத்து
ரஜினிகாந்த் கூறியது குறித்து பேசியுள்ள அண்ணாமலை, "துரைமுருகனும் எ.வ.வேலுவும் இருக்கும் போது, உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தால் கிளர்ச்சி ஏற்படும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எச்சரிக்கை செய்வதாகப் பார்க்கிறேன். யாரையும் புண்படுத்தாமல் ஸ்டாலினுக்கு உண்மைகளை கூறுகிறார்." எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அமைச்சர் துரைமுருகன் ரஜினிகாந்தை நேரடியாகவே விமர்சித்து, பல் இழந்த பிறகும் தொடர்ந்து நடிக்கும் பழைய நடிகர்களால் இளையவர்கள் வாய்ப்புகளை இழக்கிறார்கள் என்று சொல்லலாம்." எனக் காட்டமாகக் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, துரைமுருகனுடன் தான் நீண்டகாலமாக நட்பில் இருப்பதாக குறிப்பிட்ட ரஜினிகாந்த், துரைமுருகனின் கருத்து தன்னை பாதிக்காது என்று பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.