Page Loader
டெல்லி அரசின் முடிவுகளுக்கு லெப்டினன்ட் கவர்னர் கட்டுப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 
மாநில அரசாங்கத்தின் ஆலோசனைக்கு லெப்டினன்ட் கவர்னர் கட்டுப்பட்டவர்.

டெல்லி அரசின் முடிவுகளுக்கு லெப்டினன்ட் கவர்னர் கட்டுப்பட வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு 

எழுதியவர் Sindhuja SM
May 11, 2023
01:05 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லி அரசு மற்றும் அதன் லெப்டினன்ட் கவர்னருக்கு இடையேயான அதிகார பிரச்சனைகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் டெல்லி அரசுக்கு சார்பாக இன்று(மே 11) தீர்ப்பளித்துள்ளது. ஜனநாயக ஆட்சி முறையில், ஆட்சியின் உண்மையான அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கையில் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. டெல்லி அரசங்கம், சேவைகள் மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் லெப்டினன்ட் கவர்னர் அரசாங்கத்தின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளது. மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சட்டம் இயற்றும் அதிகாரம் டெல்லி சட்டசபைக்கு வழங்கப்பட்டுள்ளது என்று மேலும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

details

மத்திய அரசை எதிர்த்து வென்றது டெல்லி அரசு

"அதிகாரிகள் அமைச்சர்களின் வழிகாட்டுதல்களுக்குக் கீழ்ப்படியவில்லை என்றால், கூட்டுப் பொறுப்பின் கொள்கை பாதிக்கப்படும்" என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உத்தரவைப் படித்துக் கூறினார். டெல்லியில் மத்திய அரசு சார்பாக செயல்பட்டு வரும் லெப்டினன்ட் கவர்னருக்கும் டெல்லியின் ஆம் ஆத்மி அரசாங்கத்திற்கும் பல நாட்களாக நிர்வாக மற்றும் அதிகார பிரச்சனைகள் நிலவி வருகிறது. இந்நிலையில், மாநில அரசாங்கத்தின் சேவைகள் மற்றும் ஆலோசனைக்கு லெப்டினன்ட் கவர்னர் கட்டுப்பட்டவர் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. "குடியரசுத் தலைவரால் ஒப்படைக்கப்பட்ட நிர்வாகத்தின் கீழ் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரங்கள் உள்ளன. ஆனால், முழு டெல்லி அரசாங்கத்தின் நிர்வாகமும் அதற்குள் அடங்காது. அப்படி இருந்தால், டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தனி அரசாங்கத்தை கொண்டிருப்பதன் நோக்கம் பயனற்றதாகிவிடும்" என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.