பெங்களூரில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள், ஊழியர்கள் வெளியேற்றம்
பெங்களூரு முழுவதும் உள்ள 44க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று அநாமதேய மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர். பசவேஷ்வர் நகரில் உள்ள நேப்பல் மற்றும் வித்யாஷில்பா உட்பட ஏழு பள்ளிகளை குறிவைத்து முதற்கட்ட மிரட்டல்ள் வந்தன. அச்சுறுத்தப்பட்ட பள்ளிகளில் ஒன்று கர்நாடகாவின் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் வீட்டிற்கு எதிரே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அது நடந்த சிறிது நேரத்திற்குள், மேலும் பல கல்வி நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அதே போன்ற அச்சுறுத்தல்கள் வந்தன. இதனையடுத்து, பெங்களூரு போலீசார் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் இருந்து மாணவர்கள் மற்றும் ஊழியர்களை வெளியேற்றினர்.
துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி
இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் புரளியாக இருக்கலாம் என்றாலும், வெடிகுண்டு செயலிழக்கும் படையினரின் உதவியுடன் போலீசார் பள்ளி வளாகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை எந்தவொரு பள்ளியிலும் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவகுமார், "நான் டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். என் வீட்டிற்கு எதிரே உள்ள பள்ளிக்கும் மிரட்டல் கடிதம் வந்திருக்கிறது. அதனால் தான்,நான் இங்கு வந்து சோதனை செய்தேன். இதுவரை இது ஒரு மிரட்டல் அழைப்பு போல் தெரிகிறது. இருப்பினும் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்." என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு, பெங்களூரில் உள்ள பல தனியார் பள்ளிகளுக்கு இதுபோன்ற மின்னஞ்சல் மிரட்டல்கள் வந்தன. ஆனால் அவை அனைத்தும் பொய்யான புரளிகளாக இருந்தது.