
பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு
செய்தி முன்னோட்டம்
பெங்களூருவில் கடந்த 12 மணிநேரத்தில் பெய்த கனமழை காரணமாக நகரம் வெள்ளக்காடாக மாறியிருக்கும் நிலையில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம், ஆரஞ்சு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
பெங்களுருவில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை, திங்கட்கிழமை காலை 6 மணி வரை தொடர்ந்தது.
130 மி.மீ. அளவிலான மழை பதிவான நிலையில், ஜெயநகர், கோரமங்கலா உள்ளிட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கின.
தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
மிக்கோ லே அவுட் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 63 வயது முதியவர் மற்றும் 12 வயது சிறுவன் உயிரிழந்தனர். வொயிட்பீல்டு பகுதியில் சுவர் இடிந்ததில் 35 வயது பெண் உயிரிழந்தார்.
மீண்டும் மழை
இன்றும் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை
நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்புக்குழுவினர் சிறிய படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்டனர்.
இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் பெங்களூரு மற்றும் சுற்றியுள்ள பாகல்கோட், பெலகாம், சிக்கல்லபுரா, தார்வாட், கடக், கொப்பல், கோலார் மற்றும் விஜயநகரா பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மெஜஸ்டிக், ராஜாஜிநகர், மடிவாலா, கேஆர் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடர்ந்து கொட்டியதால், மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மழை ஓய்ந்துவிட்டது என்ற நிம்மதியில் இருந்த தருணத்தில், மீண்டும் கனமழை தொடங்கும் என்பதால் பொதுமக்கள் பதட்டத்தில் உள்ளனர்.