காவிரியில் பெருக்கெடுத்து வரும் நீர்; ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிப்பு
காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள காவிரி ஆற்றின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் திடீர் மழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு அதிகரித்துள்ளது. தமிழக எல்லையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) மாலை காவிரியில் நீர் வரத்து 22,000 கன அடியாக இருந்த நிலையில், இது ஞாயிற்றுக்கிழமை காலை 25,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வரத்து அதிகரித்து அருவிகளில் தண்ணீர் வெள்ளம் போல் அடித்துச் செல்கிறது.
தர்மபுரி கலெக்டர் உத்தரவு
ஆற்றில் நீர் வரத்து மிக அதிகமாக உள்ளதால் ஒகேனக்கல் ஆற்றில் பரிசல் சவாரி செய்யவும், அருவிகளில் குளிக்கவும் தற்காலிக தடை விதித்து தர்மபுரி கலெக்டர் சாந்தி உத்தரவிட்டுள்ளார். இந்த தடை உத்தரவு காரணமாக சின்னாறு பரிசல் துறையில் பரிசல் இயக்கம் தடை செய்யப்பட்டது. மேலும், பிரதான அருவிக்குச் செல்லும் பாதை அடைக்கப்பட்டுள்ளது. ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு ஒகேனக்கல்லில் நேரத்தை செலவிட வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதற்கிடையே, காவிரியில் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர் வரத்தின் அளவை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.