ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மாற்றம்: மருத்துவமனையில் 112 இலவச சிகிச்சைகள்
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சிசேரியன் பிரசவம், கருக்கலைப்பு, சிறுநீரகக் கல் மற்றும் மலேரியா உள்ளிட்ட 112 மருத்துவ சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இலவசமாக பெறும் வகையில் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம், இத்தகைய சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைகளில் பெற விரும்பும் பயனாளிகள் இனி சொந்தச் செலவிலேயே மருத்துவம் பார்க்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள ஆவணத்தின்படி, அரசு மருத்துவமனைகளுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த 23 சிகிச்சைகளுடன் கூடுதலாக 89 சிகிச்சைகளை இணைத்து 112 சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளது.
பட்டியல்
முக்கியச் சிகிச்சைகளும் அமலாக்கத் தேதியும்
அக்டோபர் 13-ஆம் தேதியிடப்பட்டு மாநில சுகாதார முகமைகளின் தலைமைச் செயல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தப் பரிந்துரைப் பட்டியலில், அதிக ஆபத்துள்ள பிரசவங்கள், நான்கு வகையான கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சைகள், அனைத்து நிலைகளிலான கருக்கலைப்பு, கடுமையான ரத்த சோகை, மஞ்சள் காமாலை, கணைய அழற்சி, புற்றுநோயைக் கண்டறியும் பயாப்ஸி பரிசோதனைகள் மற்றும் குழந்தைகளுக்கான ஏடிஎச்டி சிகிச்சை ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இத்திட்டம் குறித்து மாநில அரசுகள் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் வரும் நவம்பர் 25-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் இப்புதிய நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கருத்து
நிபுணர்கள் மத்தியில் இருவேறு கருத்து
மத்திய அரசின் இந்த முடிவால் மருத்துவத் துறை நிபுணர்கள் மத்தியில் இருவேறு கருத்துகள் எழுந்துள்ளன.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் தேவையற்ற அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதையும், காப்பீட்டுத் தொகை முறைகேடுகளையும் தடுக்க இந்த நடவடிக்கை மிக அவசியமானது என ஒரு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.
அதேநேரம், பல மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த அளவிற்கான நோயாளிகளின் வருகையைக் கையாள போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்றும், அவசர சிகிச்சைகளுக்கு தனியார் மருத்துவமனைகளை நாடுவதைத் தடுப்பது ஏழை நோயாளிகளை கடுமையாகப் பாதிக்கும் என்றும் மற்றொரு தரப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.