'தொகுதி பங்கீட்டால் INDIA கூட்டணி கட்சிகளுக்குள் சலனம்': உமர் அப்துல்லா கவலை
பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்திருக்கும் 'INDIA' எதிர்க்கட்சி கூட்டணியின் ஒற்றுமை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்க்கட்சி கூட்டணியான 'INDIA'வில் அங்கம் வகிக்கும் நேஷனல் கான்பரன்ஸ் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா, "INDIA கூட்டணி கட்சிகள் மாநிலத் தேர்தல்களில் இடங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்றால், அவர்கள் அதை முன்பே தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மேலும் உமர் அப்துல்லா கூறியதாவது:
நான் தொடர்ந்து கூட்டங்களில் பங்கேற்று வருகிறேன். தொகுதி பங்கீடு குறித்த தலைப்பு மீண்டும் மீண்டும் எழுந்தது. ஆனால் அதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதனால் ஏற்பட்ட பிரச்சனை தான் இப்போது நம் கண் முன்னால் நிற்கிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற தேர்தல்களில் கூட்டணியில் உள்ள அனைவரும் எதிரெதிராக போட்டியிடுகின்றனர். INDIA கூட்டணி என்பது நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமே என்று காங்கிரஸ் கூறியுள்ளது. 5 மாநிலத் தேர்தலுக்குப் பிறகு அனைத்து உறுப்பினர்களும் ஒன்றாக அமர்ந்து கருத்து வேறுபாடுகளைக் களைந்து 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நமது செயல்பாடு பாதிக்கப்படாமல் இருப்பதை கவனித்து கொள்ள வேண்டும்.