
ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை: தமிழக அரசு எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஆகஸ்ட் 25) திடீர் உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், இது ஜாமினில் விட முடியாத குற்றமாக கருதப்படும் என்றும், நீதிமன்றத்தில் ஆம்புலன்ஸுக்காக ஏற்பட்ட சேதத்திற்கு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பின்னணி
பின்னணியில் நடந்தது என்ன?
அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியின் வருகையையொட்டி, துறையூரில் நேற்று (ஆகஸ்ட் 24) இரவு 7 மணியளவில் பெரிய கூட்டம் திரண்டிருந்தது. அந்த நேரத்தில், அவ்வழியாக வந்த ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வழிமறிக்கப்பட்டது. சிலர், "இது திட்டமிட்ட முறையில் கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வந்தது" எனக் கூறி, ஆம்புலன்ஸ் டிரைவருடன் வாக்குவாதம் செய்தனர். பின்னர், விபத்து ஏற்பட்டுள்ள இடம், கூட்டம் கூடியிருந்த இடத்திற்கு அருகில் இருந்ததாக டிரைவர் விளக்கினார். இதையடுத்து போலீசார் மோதலை கட்டுப்படுத்தி, வாகனத்தை வழிமாற்றி அனுப்பினர்.
அரசின் நிலை
அரசு எடுத்த கடும் நிலை
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அரசு உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பில், "தனி நபரோ அல்லது குழுவாகவோ ஆம்புலன்ஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்தினால், குறைந்தது 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இது ஜாமீனில் வெளிமுடியாத குற்றமாக கருதப்படும்." "மேலும், வாகனத்தில் ஏற்பட்ட சேதத்திற்கான நட்டஈடாக பொருந்தும் தொகையை குற்றவாளிகள் செலுத்த வேண்டியிருக்கும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவசர மருத்துவ உதவிக்காக பயன்படும் ஆம்புலன்ஸ்கள் தாமதமாகும் போது, நோயாளிகளின் உயிருக்கு நேரடி ஆபத்து ஏற்படும். இதை தடுக்கவே, அரசு தீவிர எச்சரிக்கையுடன் கடும் தண்டனையை விதிப்பதாக அறிவித்துள்ளது.