காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான்
செய்தி முன்னோட்டம்
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான், காங்கிரஸில் இருந்து விலகி இன்று பாஜகவில் இணைந்தார்.
அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த காங்கிரஸின் முக்கிய தலைவராக இருந்த முன்னாள் முதல்வர் அசோக் சவானை, மகாராஷ்டிராவின் தற்போதைய துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் மாநில கட்சித் தலைவர் சந்திரசேகர் பவன்குல் ஆகியோர் பாஜகவிற்கு வரவேற்றனர்.
அசோக் சவான், வரும் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுவை நாளை தாக்கல் செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேட்புமனு காலக்கெடு நெருங்கிவதால் தான் அவர் அவசர அவசரமாக காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்று கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா காங்கிரஸுக்கு விழுந்த ஒரு பெரிய அடி
தனது அரசியல் எதிர்காலம் குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் தீர்மானம் எடுக்க உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் நேற்று ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை பாஜகவுடன் இணைந்து புதிய அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநில தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அசோக் சவானின் வெளியேறி இருப்பது மகாராஷ்டிரா காங்கிரஸுக்கு மேலும் ஒரு பெரிய அடியாகும்.
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் மிலிந்த் தியோரா அக்கட்சியில் இருந்து விலகி சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே அணியில் இணைந்தார்.
முக்கிய காங்கிரஸ் தலைவராக இருந்த பாபா சித்திக்கும் விலகி அஜித் பவார் தலைமையிலான என்சிபியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.