"கைதுக்கான காரணங்கள் வழங்கப்படவில்லை": நியூஸ்கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
நியூஸ் கிளிக் ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தாவை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் டெல்லி போலீஸார் கைது செய்தது சட்டவிரோதமானது என்று கூறி அவரை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த வழக்கில் ரிமாண்ட் நகல் வழங்கப்படவில்லை என்று கூறியது. இதனால் அவரது கைது செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "கைதுக்கான காரணங்கள் வழங்கப்படவில்லை என்பதில் நீதிமன்றத்தின் மனதில் எந்த தயக்கமும் இல்லை. அதனால் இந்த கைது செல்லாது. பங்கஜ் பன்சால் வழக்கிற்குப் பிறகு மேல்முறையீட்டாளரை காவலில் இருந்து விடுவிக்க உரிமை உண்டு. ரிமாண்ட் உத்தரவு செல்லாது" என்று நீதிபதி மேத்தா கூறியுள்ளார்.
சீனாவுக்கு ஆதரவான பிரச்சாரத்தை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு
சட்டவிரோத நடவடிக்கைகள்(தடுப்பு) சட்டத்தின் கீழ் கடந்த அக்டோபர் மாதம் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நியூஸ் கிளிக் நிறுவனரும், அந்நிறுவனத்தின் தலைமை ஆசிரியருமான பிரபீர் புர்காயஸ்தா இதனை நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தார். நியூஸ் கிளிக் செய்தி இணையதளம் மற்றும் அதன் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா ஆகியோருக்கு எதிராக டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, சமீபத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. சீனாவுக்கு ஆதரவான பிரச்சாரத்தை மேற்கொள்ள சீன தொடர்புகளிடம் இருந்து பணத்தை பெற்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.