
மே 10க்குப் பிறகும் நீடித்த ஆபரேஷன் சிந்தூர்; புதிய தகவலை வெளியிட்ட இந்திய ராணுவத் தளபதி
செய்தி முன்னோட்டம்
மானக்ஷா மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபவேந்திர திவேதி, 'ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானுக்குள் இந்தியாவின் ஆழ்ந்த தாக்குதல்களின் சொல்லப்படாத கதை' என்ற புத்தகத்தை வெளியிட்டார். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் கே.ஜே.எஸ். தில்லான் எழுதிய இந்தப் புத்தகம், 2025 ஏப்ரல் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிப்பதற்காக இந்தியா நடத்திய ராணுவ நடவடிக்கையை விவரிக்கிறது. நிகழ்ச்சியில் பேசிய ராணுவத் தளபதி திவேதி, இந்தப் புத்தகம் ராணுவ நடவடிக்கையின் வரலாற்றை மட்டும் சொல்லவில்லை, மாறாக ராணுவத்திற்கு வழங்கப்பட்ட முழு சுதந்திரம் மற்றும் அதன் அரசியல்-ராணுவ நோக்கங்கள் குறித்தும் ஆழமாக விவரிக்கிறது என்று குறிப்பிட்டார்.
புதிய அடையாளம்
பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய அடையாளம்
மே 10 ஆம் தேதி போர் முடிந்துவிட்டதாகப் பலர் நினைத்தாலும், உண்மையில் அது சில நாட்களுக்கு நீடித்தது. இந்த சொல்லப்படாத விஷயங்களை இந்தப் புத்தகம் வெளிப்படுத்துகிறது என்று அவர் கூறினார். இந்தப் புத்தகம், இந்திய ராணுவத்தின் வீரம், தொழில்முறை மற்றும் அசைக்க முடியாத உணர்வுக்கு ஒரு அஞ்சலி என்று ஜெனரல் திவேதி கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் புதிய நிலைக்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு அடையாளமாக மாறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும், இந்தப் புத்தகத்தில், படை வீரர்களுக்கு வழங்கப்பட்ட தெளிவான திட்டங்கள் மற்றும் தந்திரோபாய செயல்பாடுகள் குறித்தும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளதாக அவர் பாராட்டினார்.