
மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு; கேரளாவின் மலப்புரத்தில் அதிகரிக்கும் நோய்த்தொற்றுகள்
செய்தி முன்னோட்டம்
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மஞ்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிபா வைரஸ் அறிகுறியுடன் மேலும் இருவர் சனிக்கிழமை (செப்டம்பர் 21) அனுமதிக்கப்பட்டனர்.
இதன் மூலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் மொத்தம் 32 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது, தொடர்பு பட்டியலில் 267 பேர் உள்ளனர். அவர்களில், 177 பேர் முதன்மை தொடர்பு பட்டியலில் உள்ளனர் மற்றும் 90 பேர் இரண்டாம் நிலை தொடர்புகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முதன்மை தொடர்பு பட்டியலில் உள்ள 134 நபர்கள் அதிக ஆபத்துள்ள பிரிவில் உள்ளனர்.
தொடர்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு சுகாதாரத் துறை தேவையான ஆதரவை வழங்கி வருகிறது. அழைப்பு மையம் மூலம் மொத்தம் 274 பேர் ஆதரவைப் பெற்றுள்ளனர்.
உயர்நிலைக் கூட்டம்
சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் உயர்நிலைக் கூட்டம்
நிலைமையை ஆய்வு செய்ய மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தலைமையில் உயர்நிலைக் கூட்டம் மலப்புரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் சுகாதாரத் துறை இயக்குநர், கூடுதல் இயக்குநர்கள், மலப்புரம் மாவட்ட ஆட்சியர், மருத்துவ அலுவலர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அமைச்சர் வீணா ஜார்ஜ் இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தொடர்புப் பட்டியலில் உள்ள அனைவரிடமிருந்தும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த சோதனை செய்யப்படும்.
அறிகுறியுள்ள நபர்கள் சோதனைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறார்கள். அதிக ஆபத்துள்ள பிரிவில் உள்ளவர்களுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன." என்று கூறினார்.