நவம்பர் 2ம் தேதி ஆந்திராவின் நிர்வாக தலைநகரமாகும் விசாகப்பட்டினம்
ஆந்திரா மாநிலம் கடந்த 2014ம்ஆண்டில் தெலுங்கானா, ஆந்திரா என இரண்டாக பிரிக்கப்பட்டது. அப்போது ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு அமராவதியை ஆந்திராவின் தலைநகராக அறிவித்தார் என்று கூறப்படுகிறது. அதற்கான பணிகளை மேற்கொள்ள கிருஷ்ணா நதிநீர் அருகேயுள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வென்று ஆந்திரா முதல்வரான ஜெகன் மோகன் ரெட்டி, அமராவதி சட்டப்பேரவை நகரமாக செயல்படும் என்று அறிவித்தார். அதனைத்தொடர்ந்து அவர் விசாகபட்டினத்தை நிர்வாக தலைநகரமாகவும், கர்னூலை சட்டத்தலைநகராகவும் அறிவித்தார். மாநிலத்திலுள்ள 13 மாவட்டங்களும் சமமான வளர்ச்சியினை அடையவே அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டார் என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும். இதனிடையே, ஆந்திராவில் சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று(செப்.,21)துவக்கிய நிலையில், நேற்று(செப்.,20)நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு உறுதியாக அறிவிக்கப்பட்டது.
தலைநகரை மாற்றும் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது
இந்நிலையில் தசரா பண்டிகையான நவம்பர் 2ம் தேதி முதல் விசாகப்பட்டினம் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக செயல்படும் என்று அவர் அறிவித்துள்ளார். மேலும், முதல்வரின் அலுவலகம் விசாகபட்டினத்திற்கு மாற்றப்படவுள்ளது என்றும், அமைச்சர்கள் அங்கிருந்து பணியாற்ற தயாராக இருக்கும் படியும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். முன்னதாக ஜெகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டினத்தில் தலைமை செயலகம் அமைக்கப்படும் என்று கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமராவதியை தலைநகராக தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் அமராவதியையே தலைநகராக தொடரும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி இதுகுறித்து மேல்முறையீடு உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்டது. தற்போது அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் முதல்வரின் இந்த அறிவிப்பு சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.