Loading...
தனியார் பள்ளி அங்கீகார லஞ்ச வழக்கில் அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி; கைதாகிறாரா முன்னாள் அமைச்சர்?
அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது

தனியார் பள்ளி அங்கீகார லஞ்ச வழக்கில் அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி; கைதாகிறாரா முன்னாள் அமைச்சர்?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 26, 2026
01:54 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் ₹100 கோடிக்கும் மேல் லஞ்சம் பெறப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுத் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து, தனியார் பள்ளி உரிமையாளர்கள் கடந்த திமுக ஆட்சியில் சிஎம்டிஏ மற்றும் DTCP அனுமதி உள்ளிட்ட சான்றுகள் வழங்க லஞ்சம் கோரப்பட்டதாக பகிரங்கப் புகார் அளித்தனர். இதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஜூன் 27-ஆம் தேதி FIR பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

விசாரணை

தீவிரமடையும் விசாரணை மற்றும் சோதனைகள்

இவ்வழக்கில் ஏற்கனவே தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார், முன்னாள் எம்.எல்.ஏ முத்துக்குமார் மற்றும் சுரேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பி.டி. அரசகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அன்பில் மகேஷின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், கடந்த மாதம் 18-ஆம் தேதி அன்பில் மகேஷிடம் நேரில் விசாரணை நடத்தப்பட்டது.

முன்ஜாமீன்

முன்ஜாமீன் தள்ளுபடியும் தொடரும் கைது நடவடிக்கை அச்சுறுத்தலும்

விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதால் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், கைது நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் அன்பில் மகேஷ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உருவெடுத்துள்ளது.

முன்னாள் அமைச்சர்களான கே.என். நேரு, எ.வ. வேலு ஆகியோரின் வீடுகளில் சோதனைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, அன்பில் மகேஷின் முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT