புதிய நாடாளுமன்ற திறப்பு விழா: அழைப்பை ஏற்றுக்கொண்ட 2 எதிர்க்கட்சிகள்
புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதால், 19 எதிர்கட்சிகள் இந்த நிகழ்வைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், பிஜு ஜனதா தளம் மற்றும் YSRCP ஆகிய இரு கட்சிகளும் திறப்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளன. BJD கட்சியின் எம்.பி.க்கள் திறப்பு விழாவில் பங்கேற்பதை அறிவித்த BJD செய்தித் தொடர்பாளர் லெனின் மொஹந்தி , ஜனநாயகத்தின் சின்னமான நாடாளுமன்றம் அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும், அதன் அதிகாரமும் அந்தஸ்தும் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். "நாடாளுமன்றம் போன்ற அரசியலமைப்பு நிறுவனம் தனது புனிதம் மற்றும் மரியாதையை பாதிக்கக்கூடிய எந்தவொரு பிரச்சினைக்கும் மேலாக இருக்க வேண்டும் என்று BJD நம்புகிறது. இதுபோன்ற பிரச்சனைகள் ஆகஸ்ட் மாத கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்." என்றும் BJD கூறியுள்ளது.
ஆந்திர பிரதேச முதல்வரின் கட்சி திறப்பு விழாவில் கலந்துகொள்ள இருக்கிறது
தற்போது, BJD கட்சியை சேர்ந்த 12 எம்.பி.க்கள் மக்களவையிலும் எட்டு எம்.பி.க்கள் மாநிலங்களவையிலும் உள்ளனர். "இந்தியாவின் குடியரசுத் தலைவர் இந்திய அரசின் தலைவர் ஆவார். நாடாளுமன்றம் இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இரண்டு அமைப்புகளும் இந்திய ஜனநாயகத்தின் சின்னங்கள் ஆகும். இரண்டுமே இந்திய அரசியலமைப்பிலிருந்து தங்கள் அதிகாரத்தைப் பெறுகின்றன" என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியான YSRCP கட்சியும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. ஜூன் 2014-ல் ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டதில் இருந்து இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய நிதிப் பகிர்வுக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.