டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்த 200 மில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் ஏர் இந்தியா!
தங்களது டிஜிட்டல் சேவை தளங்களை நவீனமயாக்கும் திட்டத்தில் இறங்கியிருக்கிறது ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம். உலகளவில் தொழில்நுட்ப ரீதியில் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் சேவையை வழங்க திட்டமிட்டு வருகிறது அந்நிறுவனம். இதற்காக 200 மில்லியன் டாலர்களை முதலீடு செய்திருக்கிறது ஏர் இந்தியா. தங்களது இணையதளம் மற்றும் மொபைல் செயலிகளையும் நவீனமயமாக்கி வருகிறது அந்நிறுனம். பயனர்களுக்கு இலகுவான வகையில் நோட்டிபிகேஷன் சிஸ்டம் மற்றும் வாடிக்கையாளர் சேவைத் தளம், தங்களது ஊழியர்களின் தேவைக்காக பாதுகாப்பான டிஜிட்டல் வேலைக்கருவிகள் ஆகியவற்றை மேம்படுத்தி வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்னென்ன விதமான மேம்பாடுகளைச் செய்ய வேண்டும் என தெளிவாக திட்டமிட்டு, அதனை செயல்படுத்தவும் தொடங்கியிருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம்.
புதிய திட்டங்கள்:
டாடா நிறுவனம் ஏர் இந்தியாவை கடந்த 2022-ன் தொடக்கத்தில் வாங்கியது. அதனைத் தொடர்ந்து அந்நிறுவன சேவைகளை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்களை வகுத்து அதன்படியே செயல்பட்டு வருகிறது. புதிய விமானங்கள், புதிய வழித்தடங்களில் தொடங்கிய அதன் வளர்ச்சி தற்போது மேம்படுத்தப்பட்ட தரமான டிஜிட்டல் சேவைகளை பக்கம் திரும்பியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சேவை என்று இல்லாமல், வாடிக்கையாளர்கள் தொடங்கி, ஊழியர்கள் வரை அனைத்து வகைகளிலும் சிறப்பான டிஜிட்டல் தளத்தை உருவாக்க திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம்.