மும்பை மற்றும் டெல்லியிலிருந்து துபாய்க்கு கூடுதல் இடைநில்லா விமானங்கள்.. ஏர் இந்தியா அறிவிப்பு!
டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் இருந்து துபாய்க்கு கூடுதல் இடைநில்லா விமானங்களை இயக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸூடனான பிணைய சீரமைப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக இதனை அறிவித்திருக்கிறது ஏர் இந்தியா. இதனைத் தொடர்ந்து தற்போது தினசரி டெல்லி மற்றும் துபாய் இடையே 10 மடங்கும் மற்றும் மும்பை துபாய் இடையே 6 மடங்கு அதிக விமானங்களையும் இயக்கி வருகிறது ஏர் இந்தியா. அதாவது, இரு வழித்தடங்களிலும் வாரத்தின் பெரும்பாலான நாட்களில் தினசரி 8 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வருகிறது. தூபாய்க்கு இயக்கப்பட்டு வரும் விமானங்களில் ஏர் இந்தியாவின் ட்வின் ஏய்ல் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானங்களும், ஏர்பஸ் A320/A321 ரக விமானங்களும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியாவின் திட்டம்:
69 வருடங்கள் இந்திய அரசின் கீழ் இருந்துவிட்டு, கடந்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் டாடா நிறுவனத்திடம் வந்து சேர்ந்தன ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை நிறுவனங்கள். உலகின் முன்னணி விமான சேவை நிறுவனமாக ஏர் இந்தியாவை மேம்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது அந்நிறுவனம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஏர் ஏசியா இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் விஸ்தாரா ஆகிய விமான சேவை நிறுவனங்களையும் ஏர் இந்தியாவின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகளும் செயல்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து தற்போது மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது ஏர் இந்தியா.