உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேண்டுகோளை அடுத்து முடிவுக்கு வந்த 11 நாள் மருத்துவர் போராட்டம்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ரெசிடென்ட் டாக்டர்கள் சங்கம் (ஆர்டிஏ) தங்களது 11 நாள் வேலைநிறுத்தத்தை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 22) முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது. இந்த முடிவு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் வேண்டுகோள் மற்றும் வழக்கு தொடர்பான வழங்கிய உத்தரவைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. "கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியில் நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டதற்கும், நாடு முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பு குறித்த பெரிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை நாங்கள் மனதார பாராட்டுகிறோம்" என்று ஆர்டிஏ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக, எதிர்ப்பு தெரிவித்த மருத்துவர்களை பணியைத் தொடருமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டதுடன், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.
ஆர்டிஏ எய்ம்ஸ் போராட்டம் வாபஸ்
ஆர்எம்எல் மருத்துவமனையின் ரெசிடென்ட் மருத்துவர்களின் வேலை நிறுத்தமும் வாபஸ்
எய்ம்ஸ் ஆர்டிஏவின் முடிவைப் பின்பற்றி, ராம் மனோகர் லோஹியா (ஆர்எம்எல்) மருத்துவமனையின் ரெசிடென்ட் மருத்துவர்களும் தங்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று மீண்டும் பணியைத் தொடங்கியுள்ளனர். முன்னதாக, போராட்டத்தின் போது, நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. நேற்று காலை, வேலை நிறுத்தம் காரணமாக ஆஸ்பத்திரியில் ஊழியர்கள் குறைக்கப்பட்டதால் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆர்எம்எல் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அஜய் சுக்லா கூறுகையில், தொலைதூர இடங்களில் இருந்து நோயாளிகள் வருவதால் அவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார். எனினும், அவசர சிகிச்சை பிரிவுகள் எந்தவித சிக்கலும் இல்லாமல் இயங்கியதாகத் தெரிவித்தார்.