மூச்சு விடுவதை நிறுத்திய 2 வயது குழந்தைக்கு நடு வானில் உயிர் கொடுத்த விமானப் பயணிகள்
பெங்களூரிலிருந்து டெல்லிக்கு சென்று கொண்டிருந்த விஸ்தாரா விமானத்தில் சுவாசிப்பதை நிறுத்திய இரண்டு வயது பெண் குழந்தைக்கு, அதே விமானத்தில் பயணித்த ஐந்து மருத்துவர்கள் அவசர மருத்துவ சிகிச்சை அளித்ததனால் அந்த குழந்தை உயிர் பிழைத்தது. அந்த குழந்தைக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விஸ்டாரா ஏர்லைன் விமானத்தில்(UK-814) நேற்று இந்த சம்பவம் நடந்தது. அந்த விமானத்தில், எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் ஐந்து மூத்த மருத்துவர்கள், இந்திய வாஸ்குலர் மற்றும் இண்டர்வென்ஷனல் ரேடியாலஜி(ISVIR) நிறுவனத்திலிருந்து டெல்லிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இது குறித்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. நடு வானில் அந்த குழந்தை மூச்சு விடுவதை நிறுத்தியதும், உடனடியாக விமானம் நாக்பூருக்கு திருப்பப்பட்டது.
விமானத்தில் வைத்து குழந்தைக்கு ஏற்பட்ட மாரடைப்பு
விமானத்தில் இருந்த டாக்டர்கள், விமானப் பணியாளர்களின் அவசர அழைப்புக்கு உடனடியாக பதிலளித்தனர். அந்த குழந்தையை மருத்துவர்கள் பரிசோதித்து போது, அந்த குழந்தைக்கு, "நாடித் துடிப்பு இல்லை. அந்த குழந்தை சுவாசிக்கவும் இல்லை. அதன் மூட்டுகள் குளிர்ச்சியாக இருந்தன. மேலும் குழந்தையின் உதடுகளும் விரல்களும் நிறம் மாறி இருந்தன." இதனையடுத்து, விமானம் நாக்பூருக்கு பயணித்து கொண்டிருந்த போது, விமானத்தில் இருந்த மருத்துவ வசதியை வைத்து குழந்தைக்கு CPR அளிக்கப்பட்டது. அதனையடுத்து, குழந்தைக்கு செயற்கையான சுவாச காற்றுப்பாதை பொருத்தப்பட்டது. இதனால், குழந்தையின் உடல் மீண்டும் இயங்க தொடங்கியது. ஆனால், அதற்குள் அந்த குழந்தைக்கு மீண்டும் ஒரு மாரடைப்பு ஏற்பட்டது. அதை AED என்ற கருவி கொண்டு சரி செய்த மருத்துவர்கள், அந்த குழந்தையை பிழைக்க வைத்தனர்.