காஷ்மீர் சாரதா கோயிலில் 75 ஆண்டுகளுக்கு பின்னர் நவராத்திரி பூஜை - பெருமிதம் கொள்ளும் அமித்ஷா
1947ம் ஆண்டிற்கு பிறகு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள சாரதா கோயிலில் 75 ஆண்டுகளுக்கு பிறகு நவராத்திரி பூஜைகள் நடக்கவுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதமாக தெரிவித்துள்ளார். எல்லையோரம் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க சாரதா கோயிலில் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் பிரிவினைக்கு பிறகு நவராத்திரி பூஜைகள் போன்ற எவ்வித பூஜைகளும் நடத்தப்படவில்லை. அதன் பின்னர் அங்கு வாழ்ந்து வந்த பழங்குடியின மக்களால் அப்பகுதி சிதைவுற்றது என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் அதே இடத்தில் புதிதாக கட்டப்பட்ட கோயிலினை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி திரும்புவதை குறிக்கிறது - அமித்ஷா
இந்நிலையில் இது குறித்து அண்மையில் அமைச்சர் அமித்ஷா கூறுகையில், '1947ம் ஆண்டிற்கு பிறகு இந்த வரலாற்று சிறப்புமிக்க சாரதா கோயிலில் நவராத்திரி பூஜைகள் அனைத்தும் இந்தாண்டு நடத்தப்படவுள்ளது. இது ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது' என்று கூறியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், இக்கோயில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி திரும்புவதை குறிப்பதோடு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்திய தேசத்தின் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தினை மேம்படுத்துவதையும் குறிக்கிறது என்றும் கூறியுள்ளார். சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு பூஜைகள் நடத்தப்படுவதை அமித்ஷா மிக பெருமையுடன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.