அதிமுகவின் 50 ஆண்டுகால தேர்தல் வரலாறு: மூன்றாம் முறையாக 20 சதவீதமாக சரிந்த வாக்கு வங்கி!
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசியலில் அரை நூற்றாண்டுகளாகப் பெரும் சக்தியாக விளங்கிய அதிமுக, 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சரிவைச் சந்தித்துள்ளது. இத்தேர்தலில் அதிமுக 46 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, தனது செல்வாக்கை நிலைநிறுத்தப் போராடி வருகிறது. அக்கட்சித் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரை இல்லாத அளவிற்கு வாக்கு வங்கி 20.66 சதவீதமாகக் குறைந்துள்ளது அதிமுக தொண்டர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2021-இல் கூட 33% வாக்குகளைத் தக்கவைத்திருந்த நிலையில், இந்த வீழ்ச்சி அக்கட்சிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
முந்தைய சரிவுகள்
வரலாற்று பின்னணி
எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அதிமுக, 1977-ல் சந்தித்த முதல் தேர்தலிலேயே 30.4% வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதனைத் தொடர்ந்து 1980 மற்றும் 1985 தேர்தல்களில் முறையே 38.8% மற்றும் 37% வாக்குகளைப் பெற்று அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. அதிமுக-வின் 50 ஆண்டுகால வரலாற்றில் இதற்கு முன்னதாக இரண்டு முறை மட்டுமே வாக்கு வங்கி 30 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. 1989 தேர்தலில் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் கட்சி இரண்டாக உடைந்தபோது, அதிமுக-வின் வாக்கு சதவீதம் 21.8% ஆகக் குறைந்தது. 1996 தேர்தலில் ஜெயலலிதா மீதான ஊழல் புகார்கள் மற்றும் எதிர்ப்பு அலை காரணமாக, அக்கட்சி வெறும் 4 இடங்களில் மட்டுமே வென்றது. அப்போது வாக்கு சதவீதம் 21.5% ஆகசரிந்தது.
2026-ன் தற்போதைய நிலவரம்
சரிவிற்கான காரணங்கள்
கடந்த 2021 தேர்தலில் கூட 33% வாக்குகளுடன் 66 இடங்களைப் பெற்று வலுவான எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக, இந்தத் தேர்தலில் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 169 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, வெறும் 46 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சுமார் 1.31 கோடி வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், அதன் ஒட்டுமொத்த வாக்கு சதவீதம் 20.66% ஆகக் குறைந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எழுச்சி மற்றும் இளைஞர்களின் வாக்குகள் சிதறியதே அதிமுக-வின் இந்தச் சரிவிற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுக-வின் கோட்டையாகக் கருதப்பட்ட பல தொகுதிகளைத் தவெக மற்றும் பிற கட்சிகள் கைப்பற்றியுள்ளன.
எதிர்கால சவால்
மீண்டு வருமா அதிமுக?
மீண்டும் 20% நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அதிமுக, இதிலிருந்து மீண்டெழுந்து தனது 30% சராசரி வாக்கு வங்கியைத் தக்கவைக்குமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, இந்தத் தேர்தல் பாடத்திலிருந்து கற்றுக் கொண்டு கட்சியை எவ்வாறு மறுசீரமைக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே அதன் எதிர்காலம் அமையும். தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியின் வருகை, பாரம்பரிய திராவிடக் கட்சிகளில் ஒன்றான அதிமுக-விற்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாகவே 2026 தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.