கூட்டணியிலிருந்து விலகிய அதிமுக - பாஜகவுடன் இணையும் ஓபிஎஸ், டிடிவி ?
செய்தி முன்னோட்டம்
அதிமுக கட்சியில் அமைச்சர், முதல்வர், துணை-முதல்வர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தவர் ஓ.பன்னீர் செல்வம்.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலா அதிகாரமாக செயல்பட்டதால் அக்கட்சியிலிருந்து விலகி தர்மயுத்தம் மேற்கொண்டார்.
அந்த சமயத்தில் அவருடன் இருந்த நிர்வாகிகள் தற்போது ஈபிஎஸ் மற்றும் திமுக கட்சியில் இணைந்து விட்டனர்.
தொடர்ந்து, அவர் அதிமுக கட்சியினை கைப்பற்றல் மற்றும் பொதுச்செயலாளர் தொடர்பாக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே அமைந்தது.
அதிமுக
மத்திய அமைச்சர் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்த்துக்கொள்ள கேட்டதாக தகவல்
பாஜக-வினரும் பழனிசாமிக்கு ஆதரவாக இருந்ததால் ஓபிஎஸ் தற்போது ஒதுங்கி அமைதியாக இருந்து வருகிறார்.
இதனிடையே தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை தொடர்ந்து, அண்ணா மற்றும் ஜெயலலிதா குறித்து விமர்சித்து பேசி வருகிறார்.
இதனால் அதிமுக'வினர் கடும் அதிருப்தியடைந்த நிலையில், அண்ணாமலை மன்னிப்பு கோராமல் தனது நிலைபாட்டிலேயே நிலையாக உள்ளார்.
இதன் காரணமாக அவரை பதவி நீக்கம் செய்யக்கோரி அதிமுக கூறியும் பாஜக தலைமை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அண்மையில் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது தங்கள் கூட்டணியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை சேர்த்துக்கொள்ளலாம் என்று கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கூட்டணி
அதிமுக கட்சியினருக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்பு
அதற்கு மறுப்பு தெரிவித்த எடப்பாடி கே பழனிசாமி, சென்னை திரும்பியதும் பாஜக'வுடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த அறிவிப்பின் படி, பாஜக தற்போது ஓபிஎஸ் மற்றும் டிடிவி'க்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த கூட்டணியில் சசிகலாவையும் சேர்த்துக்கொண்டு அதிமுக கட்சியினருக்கு நெருக்கடி கொடுக்கவும் அதிகளவு வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
மறுபக்கம், தேர்தல் வர இன்னும் 6 மாத கால அவகாசம் உள்ளதால், இந்த காலகட்டத்திற்குள் மீண்டும் பாஜக-அதிமுக கூட்டணி ஒன்று கூடவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கட்சி
பாஜக உதவியோடு மீண்டும் அதிமுக'வை கைப்பற்ற ஓபிஎஸ் திட்டம்
பாஜக-அதிமுக இடையே ஏற்பட்டுள்ள இந்த பிளவினை கொண்டு, பாஜகவின் உதவியோடு மீண்டும் அதிமுக'வை கைப்பற்றும் நோக்கில் ஓபிஎஸ் தரப்பு செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அதே போல் மக்களவை தேர்தலில் அதிமுக தனிப்பட்ட முறையில் நின்று கணிசமாக தொகுதிகளை கைப்பற்றினால், ஓபிஎஸ் தரப்பின் திட்டங்கள் அனைத்தும் வீணாகவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு பல கோணங்களில் சம்மந்தப்பட்ட இந்த கட்சிகளின் நகர்வுகள் குறித்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.
தேர்தல்
2024ம் ஆண்டு மக்களவை தேர்தல்
இதன்படி, மக்களவை தேர்தல் நடந்து முடிந்த பின்னர் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி அமையும் என்று கூறப்படுகிறது.
மற்றொரு தரப்பினர், திமுக கட்சியின் கூட்டணியினை உடைக்க அதிமுக-பாஜக இணைந்து செயல்படுத்தி வரும் தந்திரமான திட்டமாக இது இருக்கக்கூடும் என்றும் கூறுகிறார்கள்.
வழக்கத்தை விட 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் பெருமளவிலான எதிர்பார்ப்புகள், ஆச்சர்யங்கள் மத்தியில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.