கள்ளக்குறிச்சி விவகாரம்: திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த அதிமுக
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தை பருகியதில், 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், சிபிஐ விசாரணைக்கோரி அதிமுக சார்பாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் அவையில் கோஷங்களை எழுப்ப, அவர்களை கூண்டோடு கூட்டத்தொடர் முடியும்வரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் அய்யாவு. இதனைத்தொடர்ந்து, இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்ட அதிமுகவினர் உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொண்டுள்ளனர். அந்த விவகாரத்தில் ஏற்கனவே அதிமுக சார்பில் ஆளுநரிடம் மனு தரப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, இன்று உண்ணாவிரத போராட்டத்தை அதிமுக மேற்கொண்டுள்ளது. விஷச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலகவேண்டும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.