'மணிப்பூரில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது': உச்ச நீதிமன்றம்
மணிப்பூர் விசாரணையின் மந்தமான வேகம் குறித்து இன்று கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், "மணிப்பூரில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது" என்று கூறியுள்ளது. மணிப்பூரில் மே-3ஆம் தேதி முதல் இனக்கலவரம் நடந்து வருகிறது. இதனால், இதுவரை 160 பேர் பலியாகியுள்ளனர், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். மணிப்பூரில் நடந்த வன்முறைகளின் போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உட்பட பல FIRகள் பதிவு செய்யப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் குறித்து இன்று விசாரித்த இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, "மாநில காவல்துறை கட்டுப்பாட்டை இழந்துவிட்டனர். சட்ட ஒழுங்கு முற்றிலும் இல்லை. சட்ட ஒழுங்கு கருவிகளால் மக்களைப் பாதுகாக்க முடியவில்லை என்றால், குடிமக்களின் கதி என்ன?" என்று கேள்வி எழுப்பியது.
இதுவரை, மணிப்பூரில் 6,523 FIRகள் பதிவு செய்யப்பட்டுள்ளது
நிர்வாணமாக பெண்கள் ஊர்வலம் அழைத்து செல்லப்பட்ட வழக்கு குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மணிப்பூர் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அனைத்து FIRகளையும் சிபிஐ தலையில் சுமத்த முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம், அரசுப் பணிகள், இழப்பீடு, பணி மறுசீரமைப்பு, விசாரணை மற்றும் அறிக்கைப் பதிவு ஆகியவற்றை மேற்பார்வையிட முன்னாள் நீதிபதிகள் குழுவை அமைப்பது குறித்து பரிசீலிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவரை, மணிப்பூரில் 6,523 FIRகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 252 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவற்றில், 11 FIRகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பானவையாகும்.