
'இத்தனை நாட்களாக காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது?': மணிப்பூர் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி
செய்தி முன்னோட்டம்
மணிப்பூரில் ஒரு கும்பல் இரண்டு பெண்களை நிர்வாணமாக வீதியில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்யும் வீடியோ ஜூலை 19ஆம் தேதி வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுவரை இந்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணையை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி கடந்த வாரம் மத்திய அரசு உத்தரவிட்டது.
அதன் பிறகு, சிபிஐ முறையாக இந்த வழக்கை ஏற்றுக்கொண்டு FIR பதிவு செய்தது.
இந்நிலையில், இன்று இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒரு புதிய மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.
டுயோ
வன்முறையின் போது குற்றவாளிகளுக்கு ஒத்துழைத்த காவல்துறை
விசாரணையின் போது, "மற்றொரு வீடியோ வெளிச்சத்த்திற்கு வந்தால்தான் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பது இல்லை." என்று கூறிய தலைமை நீதிபதி, "மணிப்பூரில் வன்முறைகள் தொடங்கிய மே-3ஆம் தேதியில் இருந்து பதிவு செய்யப்பட்ட 6000 FIRகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எத்தனை?" என்று அட்டர்னி ஜெனரலிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மத்திய அரசு, சரியான எண்ணிக்கைகள் தற்போது தங்கள் வசம் இல்லை என்று தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், வன்முறையின் போது குற்றவாளிகளுக்கு காவல்துறை ஒத்துழைத்தாக குற்றம்சாட்டினார்.
சம்பவத்தின் போது, பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையை அணுகியதாகவும், ஆனால் காவல்துறையினர் பெண்களை குற்றவாளிகளிடம் ஒப்படைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
த்வஜன்வ்க்
"உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை கண்காணிக்க வேண்டும்": கபில் சிபல்
மேலும் பேசிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "இது குறித்த சிபிஐ விசாரணையை விரும்பவில்லை. மேலும், இந்த வழக்கு மாநிலத்திற்குள் விசாரிக்கப்படுவதையும் மனுதாரர்கள் விரும்பவில்லை" என்று கூறினார்.
காவல்துறை மீது மனுதாரர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையும் அவர் தெரிவித்தார். உச்ச நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.
அதன் பிறகு பேசிய மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், "தப்பிப்பிழைத்தவர்கள் அதிர்ச்சியடைந்து பயமுறுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ குழுவிடம் உண்மையைச் சொல்வார்களா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. " என்று கூறினார்.
அதனால், இதை விசாரிக்க சிவில் சமூகத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர் உச்ச நீதிமன்றத்திடம் கேட்டு கொண்டார்.
ஜிவ்ல்க்கே
'இத்தனை நாட்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது': உச்ச நீதிமன்றம்
இதற்கிடையில், மத்திய அரசை கடுமையாக கடிந்து கொண்ட உச்ச நீதிமன்றம், "மே 4ஆம் தேதி சம்பவம் நடந்தது. ஜீரோ FIR மே 18ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. ஜூன் மாதம் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அது மாற்றப்பட்டது. ஜூலை 19ஆம் தேதி வீடியோ வைரலாகப் பரவியது. ஆனால், நீதிமன்ற விசாரணைக்கு வந்த பிறகுதான் இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இத்தனை நாட்களாக மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது" என்று கூறியது.
இதனையடுத்து, மத்திய அரசு சார்பில் பேசிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணித்தாலும் மத்திய அரசுக்கு ஆட்சேபனை இல்லை" என்று தெரிவித்தார்.
சிஜுக்
SIT விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை
மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசுக்கு எதிராக பாதிக்கப்பட்ட இரு பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்து நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுக்களில் கோரப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்றும் உச்ச நீதிமன்றத்திடம் கேட்டு கொண்டுள்ளனர். அதனால், நீதிமன்ற ஆவணங்களில் இரண்டு பெண்களின் பெயரும் "X" மற்றும் "Y " என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஐ.ஜி அந்தஸ்து கொண்ட போலீஸ் அதிகாரி தலைமையில் சுயேச்சையாக SIT விசாரணை நடத்த வேண்டும் என்றும், விசாரணையை மணிப்பூர் மாநிலத்துக்கு வெளியே மாற்ற வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.