ஆருத்ரா வழக்கு - தலைமறைவாக இருந்த இயக்குநர்களுள் ஒருவர் கைது
தமிழகத்தில் சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.36ஆயிரம் வட்டி வழங்கப்படும் என்ற விளம்பரம் செய்யப்பட்டது. அதனை நம்பி கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 9,255 வாடிக்கையாளர்கள் பணத்தினை கொண்டு வந்து முதலீடு செய்துள்ளனர். இதன்மூலம், இந்நிறுவனம் ரூ.2,438 கோடி பெற்று மோசடி செய்தது என்று புகார்கள் எழுந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்நிறுவனத்தின் இயக்குனராக செயல்பட்டு வந்த ஹரிஸ், மாலதி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் ஹரிஸ் கொடுத்த வாக்குமூலத்தின்படி, பாஜக.,கட்சியில் பொறுப்பினைப்பெற வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பணத்தினை பயன்படுத்தியதாக கூறப்பட்டது.
சென்னை போரூரில் தலைமறைவாக இருந்த தீபக் பிரசாத்
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 21 பேரை கைது செய்துள்ள போலீசார், 61 இடங்களில் சோதனைகளை மேற்கொண்டு கோடிக்கணக்கில் பணம், நகை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்ததோடு, 103 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது. இதனையடுத்து இவ்வழக்கின் முதற்கட்ட விசாரணை குறித்த குற்றப்பத்திரிக்கை அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சினிமா நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் ரூ.15கோடி பணத்தினை வாங்கியுள்ளார் என்பது தெரியவந்தது. இந்நிலையில் சென்னை போரூரில் தலைமறைவாக இருந்த இந்நிறுவன இயக்குநர்களுள் ஒருவரான தீபக் பிரசாத் என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, தற்போது சென்னை அசோக் நகரிலுள்ள அலுவலகத்தில் வைத்து தீபக்பிரசாத்திடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.