இனி திருப்பதி லட்டுக்கும் ஆதார் அவசியம்; தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்
இடைத்தரகர்களின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் டோக்கன் இல்லாத பக்தர்களுக்கு ஸ்ரீவாரி லட்டுகளை விற்க ஆதார் சரிபார்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. லட்டு விற்பனையை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தும் நோக்கில் இந்த புதிய முறை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) முதல் அமலுக்கு வந்தது. சமூக ஊடகங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு பதிலளித்த திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, பொது பக்தர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். லட்டு வளாகத்தில் இதற்காக சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், குறிப்பாக 48 முதல் 62 வரையிலான கவுன்டர்களில், தரிசன டோக்கன்கள் அல்லது டிக்கெட்டுகளுடன் பக்தர்கள் முன்பு போலவே கூடுதல் லட்டுகளை வாங்கலாம் என அவர் மேலும் கூறினார்.
ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 2 லட்டுகள்
வெங்கையா சவுத்ரி மேலும் கூறுகையில், "திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் சில ஊழியர்கள் தங்களுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி லட்டுகளை வெளிமார்க்கெட்டில் விற்று வருவதையும் கவனித்தோம். இதைத் தடுக்க இனிமேல் தரிசன டோக்கன் இல்லாத பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டையை காட்டி 2 லட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்." எனத் தெரிவித்துள்ளார். கடந்த சில காலமாகவே இடைத் தரகர்கள் மற்றும் வெளிமார்க்கெட்டில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டுகள் அதிக விலைக்கு கள்ளத்தனமாக விற்கப்படுவதாக தொடர்ந்து புகார் வந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.